எந்திரன் - கொஞ்சம் ஓவரா தான் போறாங்க ...!

சூப்பர் ஸ்டார் " ரஜினி " நடிக்கும் படம், ஷங்கர் படங்களில் அதிக நாட்கள் எடுக்கப்பட்ட படம், " சன் பிச்சர்ஸ் " ன் முதல் தயாரிப்பு, லச்சகனக்கான ரசிகன் எதிர்பார்க்கும் படம், இப்படி  எந்திரனின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் , பாடல் வெளியீடு ஒருபக்கம், டிரைலர் வெளியீடு ஒருபக்கம், என தமிழ் நாடு களை கட்ட , எந்திரனின் எதிர்பார்ப்பு மிகுதியானது.  ஆனால் நம் அத்தனை எதிர்பார்ப்புகலையும் எந்திரன் பூர்த்திசெய்யவில்லை என்பதுதான் உண்மை. 
கதை இதுதான்: விஞ்ஞானி வசீகரன் உருவாக்கும் ரோபோவான சிட்டிக்குள் மனித உணர்வுகள் நீங்கலாக உலகின் உள்ள அத்தனை தரவுகளும் அதன் நினைவக நிரலில் நிரப்படுகின்றன. ஒருகட்டத்தில் மனித உணர்வுகள் ஊட்டப்படும்போது சிட்டியின் சில்மிஷங்களும், வில்லத்தனங்களும் என்ன? அதை வாசீகரன் தனது திறமையால் எப்படி கட்டுக்குள் கொண்டு வருகிறார் என்பதுதான் சுஜாதாவின் திரைகதை. இதில் பாடல்கள், நகைச்சுவை, பிரமாண்ட சண்டைக்காட்சிகள், கிராஃபிக்ஸ் நுட்பம், கொஞ்சம் ஊறுகாய் மேசேஜ் என்று தனக்கான மசாலாவை கச்சிதமாக  அரைப்பதில் வெற்றி பெற்று விடுகிறார் ஷங்கர்.
 
 

ஆனால் விஸுவல் எபெக்டுகளின் கற்பனையில் எவ்வித படைபூக்கமும் இல்லாத நிலையில் கிராபிக்ஸ் காட்சிகளின் தரமும் என்பதில் ஏதோ ஆடிதள்ளுபடியில் வாங்கிய பனாரஸ் பட்டுப்புடவை போல பல் இளிப்பதில் சர்வதேசத் தரத்தை எட்ட முடியவில்லை என்பது கண்கூடு. குறிப்பாக ஹெலிகாப்டர் சண்டைகாட்சியிலும், ரோபோக்கள் உருமாறும் காட்சிகளிலும் இரண்டாம் தரமான கிராஃபிக்ஸ் என்பது ரஜினியை தெய்வமாக வழிபடும் கடைகோடி ரசிகனுக்கும் தெரியும்.

உயர்நிலை ரோபோவை மையப்படுத்திய கதை என்றாலும்,  வெறும் ஆட்டத்துக்கும் இச்சைக்கும் உரிய பொருளாக பெரும்பாண்மை ரஜினி படங்களில் கதாநாயகி மையப்படுத்தப் படுவது வழக்கம் என்றாலும் இதில் ஒருபடி ஆறுதலாக ஐஸ்வர்யாராயை கதையோட்டம் முழுமையும் பயன்படுத்தியிருப்பதிலும், ரஜினிக்கான மாஸ்ஹீரோ பில்ட் அப்புகள், வசனத் தெறிப்புக்கள் இல்லாதிருப்பதிலும் தரமான ரசிகனுக்கு எந்திரன் கொஞ்சம் ஆறுதலான படம்தான்.

வசீகரனாகவும் - சிட்டி ரோபோவாக உருவகப்படுத்தப்படும் காட்சிகளிலும், ரஜினி துள்ளலான காதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார். குறிப்பாக காதல்காட்சிகளில் ராயைப் பார்த்தகணமே காதலும் இளமையும் பொங்கி வழிவது ஆச்சர்யகரமானது மட்டுமல்ல… ரியல் மெட்டபாலிக் ஹூமன் கெமிஸ்ட்ரியை ரஜினியின் முகத்தில் லிட்டர் கணக்கில் பார்க்க முடிகிறது. சந்தானம்-கருனாஸ் கூட்டணி நகைசுவையில் ஸ்கோர் செய்வதைக்காட்டிலும் ரோபோ ரஜினி ஸ்கோர் செய்கிறார். பல நேரங்களில் சந்தானம்-கருணாஸ் நகைச்சுவை தேவையற்றதாகவும் தோல்வியடைக்கூடியதாகவும் இருகிறது.  

ஐஸ்வர்யாராய் பச்சனுக்கு கதையில் முக்கியத்துவம் இருந்த போதிலும்,  அவரது மிஸ்வேல்டு தோற்றப் பொலிவு கிழடு தட்டி காட்சியளிகிறது பல காட்சிகளில். எனினும் அந்த முதிர்ச்சியை தவிர்த்துக்காட்ட அவருக்கான ஆடை அலங்கார நிபுணர்கள் பெருமுயற்சி எடுத்து அதில் வெற்றி பெற்று விடுகிறார்கள்.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் காட்சிகளுகான கருத்தோட்ட அடிப்படையில் அமைந்திருக்கும் ஒளியமைப்பும்,  சப்ஜெக்டீவ் வகை கோணங்களின் ஆதிக்கமும் கச்சிதம். பாடல் காட்சிகளில் மட்டும் ரசிகனை களத்தில் பிரவேசிக்கச் செய்யும் அற்புதத்தை நிகழ்த்தியிருகிறார். அதற்காக அவரை பாராட்டாமல் இருக்கமுடியாது.
 

இன்னோரு பக்கம் சுஜாதாவின் வசனங்களுக்கு இணையாக எல்லா காட்சிகளிலும் வசனத் திருத்தம் செய்திருக்கும் மதன் கார்க்கின் அறிவியல் தமிழின் அறிவு தமிழ்சூழலில் அபூர்வமானது.
 
குறிப்பாக இரும்பிலே ஒர் இதயம் பாடலில் கார்க்கின் சொல்லாடல் அவரது தந்தை வைரமுத்துவாலும் சாத்தியப்படுத்த முடியாதது. அவர் ரோபாட்டிக்ஸ், உணர்விகள் குறித்து ஆய்வு செய்த இளம் முனைவர், முக்கியமாக கவிஞர் என்பதுதான் இதனை சாத்தியப்படுத்திருகிறது. இவரை அடையாளம் கண்ட வகையில் ஷங்கர் ஒரு நிர்வாக ஒருங்கினைப்பாளராக வெற்றி பெற்று விடுகிறார்.

இறுதியாக ரஹ்மான் இரும்பிலே ஒர் இதயம், கிளிமஞ்சாரோ, காதல் அனுக்கள் ஆகிய பாடல்களின் வழி தனது கலவையை ஸ்தாபித்து விடுகிறார். இவரது ஆஸ்கர் சாகாவன ரசூல் ஒலிகலவையில் தனது பணியை திறம்படச் செய்திருந்தாலும் ஒரு வெகுசன சயின்ஸ் பிக்ஸன் படத்தில் உலகத்தரத்துக்கான ஒலிகள் மிஸ்சிங். இருப்பினும் எந்திரனை ஒரு உள்ளூர் பொழுது போக்கு சினிமாவாக அங்கிகரிக்கலாம்.
 
மாறாக சன் டிவி - ன் ஓயாத விளம்பரம் , 180 கோடிக்கு மேல் செலவு , யாரும் போகாத இடத்தில் சூட்டிங் , ஆங்கிலப்பட தொழில்நுட்பங்கள் , போன்ற அதிகபடியான விளம்பரங்களை பார்க்கும் நமக்கு திருப்தியா ? ?  என்றால்  நிச்சயமாக இல்லை. 
 
 
 
விடாம வாசிக்கறாரே ?  அப்போ  " சன் டிவி " ல வேலை செய்வரோ ?  
 
 

No comments: